×

மாற்று தலைவர்களாக 5 பேர் நியமனம்

பேரவை கூட்டத்தை சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கவனிப்பார்.இருவரும் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவர்களில் ஒருவர் அவையை நடத்துவார். அந்த வகையில், 6வது பேரவை கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்கள் பட்டியலை சபாநாயகர் மு.அப்பாவு நேற்று அறிவித்தார். அந்த பட்டியலில், திமுக உறுப்பினர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், துரை சந்திரசேகர் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

* விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்
தமிழக சட்டபேரவையின் 2வது நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.வடிவேல்(வாணியம்பாடி), ஏ.தெய்வநாயகம்(மதுரை மத்தி), எம்.தங்கவேல்(முசிறி), துரை ராமசாமி(வெள்ளக்கோவில்), கு.க.செல்வம்(ஆயிரம் விளக்கு), இராசசேகரன்(ஆலங்குடி) ஆகியோர்க்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து மறைந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன், புகழ் பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம்.பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான ராஜேந்திரன், தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

* ‘சம்சாரம் இல்லாமல் வாழ முடியுமா?’
கேள்வி நேரத்தில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, மின்சாரம் தொடர்பான கேள்வி எழுப்பினார். அவர் பேச்சை தொடங்குவதற்கு முன்பாக, சம்சாரம் இல்லாமல் வாழலாம், ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது” என்று ஆரம்பித்தார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, “சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை என்னால் ஏற்க முடியாது” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

* பொன்னேரி தாலுகா பிரிக்கப்படுமா? பேரவையில் அமைச்சர் பதில்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம் பேசுகையில்,‘‘பொன்னேரி தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாலுகாவாக இருக்கிறது. இதனால் அதிகாரிகளுக்கு பணிச்சுமை இருக்கிறது. கடந்த பெரும் வெள்ளம் வந்தபோது அவர்கள் கஷ்டப்பட்டார்கள். எனவே பொன்னேரி தாலுகாவை பிரித்து கொடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், உறுப்பினர் குறிப்பிட்டுள்ள தாலுகா மிகப்பெரியது. இது அரசின் கவனத்தில் இருக்கிறது. எதிர்காலத்தில் தாலுகாக்கள் பிரிக்கப்படும்போது இந்த தாலுகாவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.

The post மாற்று தலைவர்களாக 5 பேர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Speaker ,M. Appavu ,Deputy Speaker ,K. Pichandi ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...